தமிழர்களின் அடையாளம் எது? திராவிடரா? அல்லது தமிழரா?

தமிழர்களின் அடையாளம் எது? திராவிடரா? அல்லது தமிழரா?

தமிழர்களின் அடையாளம் எது? திராவிடரா? அல்லது தமிழரா? என்ற கேள்விக் கணையுடன் வரலாற்று, அரசியல் ரீதியிலான ஒரு விவாதம் சூடாகக் கிளம்பியுள்ளது.
தமிழரின் அடையாளம் எது? கோவையில் தமிழக அரசால் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறவுள்ள நிலையில், அம்மாநாடு குறித்து முரசொலியில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு,கருணாநிதி எழுதிய கடிதம் மற்ற நாளிதழ்களில் திமுக, தலைமைக் கழகத்தால் விளம்பரமாக அளிக்கப்பட்டுள்ளது. அதில், “திராவிடத்தை, திராவிடர் நாகரீகத்தை, அவர் தம் கலையை, கலாச்சாரத்தை, பண்பாட்டை, பழக்க வழக்கங்களை, தென்னகப் பலாக்கனியான் – திராவிடத்தில் குலுங்கிடும் இனிய தமிழ்ச் சுளைகளை; ஆம், இலக்கியச் சுளைகளை…” என்று எழுதியுள்ளது பெரும் சர்ச்சையை உருவாக்க, அதுவே தமிழரின் அடையாளம் எது? திராவிடரா? தமிழரா? என்ற விவாதத்தை கிளப்பியுள்ளது.
கிருஷ்ணசாமி-மாநாடு-ஜூன்-2010

கிருஷ்ணசாமி-மாநாடு-ஜூன்-2010

புதிய தமிழகம் கட்சியின் சார்பில் துவக்கப்பட்டுள்ள இந்த விவாதம் சென்னை, தியாகராயர் நகரிலுள்ள செ.தெ.நாயகம் மேனிலைப் பள்ளி மைதானத்தில் திங்கட்கிழமை மாலை ஒரு கருத்தரங்கமாக துவங்கி நடைபெற்றது.
தமிழர் என்று சொல்லின் மருவே திராவிடர் ஆனது: கருத்தரங்கின் முதல் பேச்சாளராக வந்த தமிழ்த் திரைப்பட இயக்குனர் புகழேந்தி தங்கராஜ், தமிழர் என்று சொல்லின் மருவே திராவிடர் ஆனது என்பதை தேவநேயப் பாவாணர் உறுதி செய்துள்ளதை எடுத்துக் கூறி, ஒரு மருவு எப்படி தொன்மையான தமிழினத்தின் அடையாளம் ஆகும் என்று கேள்வி எழுப்பினார்.

கருணாநிதி திராவிடரா? தனது கடிதத்தில் திராவிடர், திராவிடம் என்று கூறி அடையாளப்படுத்த முயற்சிக்கும் தமிழக முதல்வர், திராவிடத்தின் அங்கமாகவுள்ள கருநாடகத்திலோ அல்லது ஆந்திரத்திலோ தேர்தலில் நிற்கத் தயாரா என்று கேட்டது மட்டுமின்றி, தனது அடையாளம் என்ன, தன்னை திராவிடர் என்கிறாரா அல்லது தமிழர் என்கிறாரா என்பதை முதலில் கருணாநிதி தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.
தமிழர் என்ற உணர்வு இல்லாத காரணத்தால்தான், தமிழ் மொழியை உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிவிட்டு, அதனை நடைமுறைக்கு கொண்டு வர அனுமதி பெற எந்த முயற்சியும் தமிழக முதல்வர் எடுக்கவில்லை என்று குற்றம் சாற்றினார்.
தமிழ் சொற்களை நீக்கிவிட்டால், மற்ற மொழிகள் அழிந்து விடுமா? தமிழ் மொழியின் வளமையை ஆய்வு செய்த அறிஞர் பலர், அதிலிருந்து பிறந்த மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் உள்ள தமிழ் சொற்களை நீக்கிவிட்டால் அந்த மொழிகளே இருக்காது என்று கூறியதைச் சுட்டிக்காட்டிய தமிழக அரசின் முன்னாள் அரசவைக் கவிஞர் முத்துலிங்கம், தமிழ் மொழியில் உள்ள வடமொழிச் சொற்களை நீக்கினால் அது மேலும் சிறப்புப் பெறும் என்று கூறினார்.
தாயுமானவர் முதன்முதலில் திராவிடர் என்ற வார்த்தையை உபயோகித்துள்ளார்: திராவிடர் என்ற சொல் தமிழ் இலக்கியம் எதிலும் இல்லாத ஒரு வார்த்தை என்று கூறிய தமிழறிஞர் அருகோ, அது தாயுமானவர் பாடிய பாடல் ஒன்றில் மட்டும், அதுவும் எதிர்மறைப் பொருளில் குறிப்பிடப்பட்டுள்ளதை பாடிக்காட்டினார்.
செம்மொழி என்று கூறுவதால் தமிழிற்கு பெருமை ஏதுமில்லை என்றும், இப்போது தெலுங்கு, கன்னட மொழிகளையும் செம்மொழி என்று மத்திய அரசின் பண்பாட்டுத் துறை அமைச்சர் அம்பிகா சோனி அறிவிக்க உள்ளார் என்றும் அருகோ கூறினார்.
“நாம் மொழியாலும், மரபாலும், தேசியத்தாலும் தமிழரே” என்று அருகோ கூறினார்.
தமிழ் மொழிச் சொற்களே வடமொழியில் உள்ள பெரும்பான்மை சொற்கள் என்று கூறி தனது உரையைத் துவக்கிய தமிழறிஞர் பேராசிரியர் ம.இலெ.தங்கப்பா, மாலையை குறிப்பிட, சூரியன் மேற்கில் சாயும் பொருள்பட நாம் கூறும் சாயங்காலம் என்றத் தமிழ்ச் சொல் சாய்ங்கால் என்றும், புவியைக் குறிப்பிட தமிழில் உள்ள பழவி என்ற சொலை பிருத்வி என்றும், பவழம் என்ற சொல் பிரவாகம் என்றும், படி என்ற சொல் பிரதி என்றும், தமிழ் மொழிச் சொற்கள் அவர்கள் வாயில் நுழையாத காரணத்தால் ஒலி மாறி வடமொழியாக புழங்கிவருவதைச் சுட்டிக்காட்டினார்.
சமஸ்கிருதம் தமிழிலிருந்து உருவாக்கப்பட்ட ஒரு மொழி: வடமொழி என்று கூறப்படும் சமஸ்கிருதம் எந்த ஒரு காலத்திலும் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் பேசப்பட்ட ஒரு மொழியல்ல என்றும், தமிழ் உட்பட வழக்கில் இருந்த பேச்சு மொழிகளில் இருந்து உருவாக்கப்பட்ட ஒரு மொழியே அது என்றும் கூறிய பேரா.தங்கப்பா, திராவிடம் என்பது பொய் என்றார். அப்படி ஒரு பகுதி வரலாற்றில் இல்லை என்று கூறிய பேரா. தங்கப்பா, தமிழை ஆய்வு செய்த மொழியியல் ஆய்வாளரான கால்டுவெல் தமிழையும், அதிலிருந்து பிறந்த மற்ற தென்னாட்டு மொழிகளையும் திராவிடக் குடும்பம் என்று கூறியதையும் சுட்டிக்காட்டினார்.
எனவே, மொழியால், இனத்தால், நாட்டால், பண்பாட்டால் நாம் தமிழர் என்பதே உண்மை, அது மட்டுமே நமது அடையாளம் என்று கூறினார்.
ஈழத்தில் தமிழினப் படுகொலைக்குப் பின்னர், தமிழர்களிடையே உருவாகிவரும் தமிழ்த் தேசிய உணர்வைக் கண்டு அச்சமுற்றதாலும், எங்கே அந்த வரைமுறைக்குள் தன்னால் வர முடியாதோ என்கிற அச்சத்தாலுமே திராவிடர், திராவிடம் என்றெல்லாம் கருணாநிதி பேசுவதாக தமிழக அரசின் முன்னாள் அரசவைக் கவிஞர் புலவர் புலமைப்பித்தன் கூறினார்.
“ஒரு மருந்து காலாவதியாகும் போது அது விஷமாகிறது, அதுபோலவே, திராவிடம் என்பது இப்போது பொருளற்றதாகிவிட்டது” என்று கூறிய புலமைப் பித்தன், தந்தை பெரியார் திராவிடர் என்ற சொல்லால் தமிழை மீட்டார். பெரியார் தோன்றியிருக்காவிட்டால் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்திருக்காது என்றார்.1956ஆம் ஆண்டுவரை தமிழுக்கு திராவிடம் அரணாக இருந்தது, இன்றைக்கு அது தேவையற்றதாகிவிட்டது என்று கூறிய புலவர் புலமைப்பித்தன், தமிழர் என்ற அடையாளத்தை கண்ட பிறகு என்ன செய்யப்போகிறோம் என்பது முக்கியம் என்றார்.
தமிழரின் முன்னேற்றத்திற்கு எதிராக இருந்த ஒரு சமூதாயத்தினை எதிர்த்து தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்த தந்தை பெரியார், திராவிடர் என்று அடையாளத்தை பயன்படுத்தினார் என்று கூறிய அய்யநாதன், அது அரசியல் அடையாளமாக்கப்பட்டப் பிறகு, தமிழரின் மு்ன்னேற்றத்தைத் தடுக்கும் மற்ற மொழிச் சக்திகளும் தமிழர் அரசியலில் ஊடுறுவ வழி வகுத்துவிட்டது என்றும், இந்த நிலை மாற, தமிழர் என்ற ஒரே அடையாளத்தை தங்களது மொழியை, இனத்தை, பண்பாட்டை, அரசியலை காப்பாற்றிக் கொள்ள தமிழர்கள் கொள்ள வேண்டும் கூறினார்.
திராவிடரா-தமிழரா-ஜூன்-2010

திராவிடரா-தமிழரா-ஜூன்-2010

இக்கருத்தரங்கை துவக்கி வைத்தும், இறுதியிலும் உரையாற்றிய புதிய தமிழகம் கட்சித் தலைவர் மருத்துவர் க.கிருஷ்ணசாமி, நாம் திராவிடரா அல்லது தமிழரா என்ற விவாதத்தை நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்பதற்காகவே இந்தக் கருத்தரங்கம் நடத்தப்படுவதாகத் தெரிவித்தார்.

“தமிழர் என்கிற நமது அடையாளத்தை முற்றிலும் அழிக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது, அதனை தமிழக முதல்வரே செய்து வருகிறார். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று வரலாற்றில் செழித்திருந்த தமிழினம், அன்னிய இன ஊடுவல்களால் சாதிய நோய்வாய்ப்பட்டுள்ளது. இதனை திராவிட கோட்பாடுகள் மேலும் வலிமைபடுத்துவதாகவே உள்ளது. திராவிடம் என்பது தமிழரின் வரலாற்றில் இடையில் திணிக்கப்பட்டது, அது இடையிலேயே போய்விட வேண்டும்.
சாதியை ஒழித்து எல்லோரும் ஒன்றுபட வேண்டும்: தமிழன் என்கிற அடையாளம் மட்டுமே தமிழினத்தைத் சூழ்ந்துள்ள பிரச்சனைகளக்கு தீர்வு காண உதவும். உலகமெல்லாம் பிரிந்து போவதற்குச் சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றன, நாம் மட்டுமே இணைந்து வாழ்வதற்கு சண்டை போட்டுக் கொண்டிருக்கிறோம். சாதியால் நாம் ஒருவரை ஒருவர் தாழ்த்திக்கொண்டிருக்கின்றோம். தமிழன் என்கிற உணர்வால் அதனை நாம் வென்றிட முடியும். கண்டதேவி கோயில் தேர் வடம் பிடித்தது, சாதியை ஒழித்து எல்லோரும் ஒன்றுபட வேண்டும் என்பதற்கே.
ஈழத்தில் நம் இனத்தை அழித்த போரை நிறுத்த நாம் எப்படியெல்லாமோ போராடினோம், ஆனால் போர் நிற்கவில்லை. நமது போராட்டங்களுக்கு எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை. 6 கோடி பேர் தமிழ்நாட்டில் இருந்தும் நம்மால் ஈழத்தில் நம் இனத்தைக் காக்க முடியாமல் போனதற்கு நாம் தமிழர் என்ற ஒரே அடையாளத்துடன் ஒற்றுமையாக போராடததே காரணம் ஆகும்.
ஒரு பக்கம் திராவிடம் என்ற அடையாளம், மறுபக்கம் சாதியம் என்கிற நம்மை பிரிக்கும் சமூக அடையாளம். ஈழ விடுதலைக்கு எதிராக நடந்த துரோகத்திற்கு திராவிடமும் ஒரு காரணம். நாம் எப்படி திராவிடர் என்று அடையாளப்படுத்தப்படுகிறோம்?
திராவிட இனம் என்ற ஒன்று இருந்ததாக சான்றுகள் ஏதுமில்லை: இந்த உலகில் உள்ள மனித இனங்கள் மூன்றாக வகைபடுத்தப்பட்டுள்ளன. ஒன்று காக்கசாய்ட் எனும் வெள்ளையினம், இரண்டாவதாக மங்கோலாயிட் எனும் மஞ்சள் இனம், மூன்றாவதாக நீக்ராய்ட் என்கிற கருப்பினம். நம்மை கருப்பினத்திற்கு கீழ் ஆஸ்ட்ராய்ட் என்று துணை இனமாக பிரித்துக் காட்டுகின்றனர். இதையே அடிப்படையாகக் கொண்டு நம்மை திராவிடர் என்றும், நாம் தொன்று தொட்டு வாழ்ந்த இடம் திராவிடம் என்றும் கூறுகின்றனர். ஆனால் திராவிட இனம் என்ற ஒன்று இருந்ததாக சான்றுகள் ஏதுமில்லை.
ஆரியர்கள் மாயை, ஆரியப் படையெடுப்பும் மாயை: சிந்து வெளி நாகரிகத்தை திராவிட நாகரிகம் என்கின்றனர், அது அழிந்தததற்கு ஆரியப் படையெடுப்பு காரணமென்கி்ன்றனர். ஆனால் அவர்கள் கூறும் காரணங்களை ஆராய்ந்து பார்க்கையில் இவை எதற்கும் சான்றுகள் இல்லையென்பது தெரிகிறது. இங்கு வந்துள்ளவர்கள் ஆரியர்களும் இல்லை, அவ்வாறு கூறுவது ஒருவித மாயை. அதுபோலவே நம்மை திராவிடர் என்று கூறுவதும் மாயையே. நம்மை திராவிடர் என்று அடையாளப்படுத்திவரும் தமிழக முதல்வர் விவாதத்திற்கு அழைக்கட்டும் நான் தயாராகவே இருக்கிறேன்.
திராவிடம் பிரிக்கிறது. தமிழர் என்பது இணைக்கிறது: எனவே திராவிடர் என்ற பொய் எப்படி நமது அடையாளமாக முடியும்? நம்மை திராவிடர் என்று அடையாளப்படுத்துவது, நமது பிரச்சனைகளுக்குத் தீர்வு காண அல்ல, தமிழினத்தை, அதன் அடையாளத்தை சிதைப்பதற்கே பயன்படுத்துகின்றனர். நாம் நம்மை தமிழர் என்று அடையாளப்படுத்திக்கொண்டால் தான் தமிழினத்தின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும். ஈழத்தில் தமிழினத்தை அழிக்க நடந்த போர், இப்போது தமிழினத்தின் அடையாளத்தை அழிப்பதில் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டுமானால், நமது அடையாளம் தமிழர் என்பதை உணர்ந்து நாம் ஒன்றிணைய வேண்டும். திராவிடம் பிரிக்கிறது. தமிழர் என்பது இணைக்கிறது” என்று மருத்துவர் கிருஷ்ணசாமி பேசினார்.
இக்கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:
“எங்கள் குருதியோடு இரண்டரக் கலந்துள்ள தமிழ் மொழியின் வழி – எங்கள் தாய் மொழியின் வழி – ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழர் என்றே எங்களை அடையாளம் காட்டுகிறது வரலாறு. இந்த நீ்ண்ட நெடிய பெருமிதத்திற்குரிய வரலாற்றைத் திரித்து, தங்களது சுய இலாபங்களுக்காக ‘திராவிடர்’ என்று எங்களை அடையாளப்படுத்த நினைப்பவர்கள் எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும், இந்தக் கருத்தரங்கம் அவர்களை வன்மையாகக் கண்டிக்கிறது. நாங்கள் பிறப்பால் தமிழர், இறப்பாலும் தமிழர். எங்களது அடையாளம். அது மட்டுமே எங்கள் அடையாளம் என்று தமிழ் அறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும் பங்கேற்கும் இந்தக் கருத்தரங்கம் வலியுறுத்துகிறது. தமிழர் என்கிற எங்கள் அடையாளம் காக்க, தமிழராய் எழுவோம் என்று இக்கருத்தரங்கம் உறுதியேற்கிறது”.
தமிழரா? திராவிடரா? எது நமது அடையாளம் என்பதை ஐயத்திற்கிடமின்றி உறுதிபடுத்த தமிழ்நாடு முழுவதும் இப்படிப்பட்ட கருத்தரங்கத்தை புதிய தமிழகம் கட்சி நடத்தும் என்றும் மருத்துவர் கிருஷ்ணசாமி கூறினார்.

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , ,

3 பதில்கள் to “தமிழர்களின் அடையாளம் எது? திராவிடரா? அல்லது தமிழரா?”

 1. Tamilselvan Says:

  இதெல்லாம் சும்மா, உதாரு கேசுகள்.

  ஒரு பதவி கொடுத்தால், பிளேட்டைத் திருப்பிப்பாடும் கோஷ்டிகள்!

  • vedaprakash Says:

   உண்மைதான், குணாவின் முழக்கத்தையே காணோமே?

   மாயைகளில் உழல்வதுதான், தமிழர்களில் காலக்கட்டாயம்.

 2. நெட்டிமையார் Says:

  ஆரியர்-திராவிடர் என்றுமே இருந்ததில்லை.

  ஆனால், திராவிடக் கட்சிகள் அப்பெயர்களைச் சொல்லிக் கொண்டு நன்றாக வியாபாரம் செய்தன.

  திராவிடம் பேசி, மற்ற மாநிலங்களுடன் சண்டைப் போட்டு, எல்லாவற்றையும் இழந்தன.

  இருப்பினும் பொழுப்பு அடங்காமல் அரசியல் செய்து வருகின்றன.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: